2 கொரிந்தியர் 1 – 2 Corinthians Chapter 1

2 Corinthians Chapter 1

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

2 கொரிந்தியர் அதிகாரம் 1

1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:

2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

3. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

4. தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

5. எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

6. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

7. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.

8. ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

9. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

10. அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

11. அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

12. மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.

13. ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.

14. கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

15. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,

16. பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.

17. இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

18. நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

19. என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.

20. எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

21. உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

22. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

23. மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.

24. உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =