2 நாளாகமம் 5 – 2 Chronicles Chapter 5

2 Chronicles Chapter 5

2 நாளாகமம் அதிகாரம் 5

1. கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.

2. பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

3. அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

4. இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,

5. பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.

6. ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையாரனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.

7. அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.

8. கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.

9. பெட்டியிலிருக்கிற தண்டுகளின்முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

10. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

11. வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.

12. ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.

13. அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.

14. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =