2 நாளாகமம் 32 – 2 Chronicles Chapter 32

2 Chronicles Chapter 32

2 நாளாகமம் அதிகாரம் 32

1. இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.

2. சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

3. நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

4. அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.

5. அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,

6. ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

7. நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.

8. அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

9. இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:

10. அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?

11. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

12. அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களைத் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப்பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?

13. நானும் என் பிதாக்களும் தேசத்துச்சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?

14. உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?

15. இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,

16. அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

17. தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

18. அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

19. மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

20. இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.

21. அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

22. இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.

23. அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.

24. அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

25. எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.

26. எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

27. எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

28. தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

29. அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.

30. இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

31. ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

32. எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

33. எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =