நீதிமொழிகள் 8 – Proverbs Chapter 8

Proverbs Chapter 8

நீதிமொழிகள் அதிகாரம் 8

1. ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?

2. அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.

3. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:

4. மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.

5. பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

6. கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும்.

7. என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.

8. என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.

9. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.

10. வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

11. முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

12. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

13. தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

14. ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.

15. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.

16. என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்து வருகிறார்கள்.

17. என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

18. ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

19. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

20. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,

21. அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.

22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

31. அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

32. ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

33. நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

34. என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

35. என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

36. எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 6 =