நீதிமொழிகள் 26 – Proverbs Chapter 26

Proverbs Chapter 26

நீதிமொழிகள் அதிகாரம் 26

1. உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

2. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.

3. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

4. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

5. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

6. மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.

7. நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

8. மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பான்.

9. மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.

10. பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.

11. நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.

12. தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

13. வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

14. கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

15. சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

16. புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

17. வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.

18. கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,

19. அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.

20. விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.

21. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.

22. கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

23. நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.

24. பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.

25. அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

26. பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.

27. படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

28. கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =