நீதிமொழிகள் 17 – Proverbs Chapter 17

Proverbs Chapter 17

நீதிமொழிகள் அதிகாரம் 17

1. சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

2. புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

3. வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

4. துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

5. ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.

6. பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

7. மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

8. பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

9. குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

10. மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.

11. துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.

12. தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.

13. நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

14. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

15. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்

16. ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.

17. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

18. புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.

19. வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

20. மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

21. மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

22. மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

23. துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.

24. ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.

25. மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

26. நீதிமானை தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.

27. அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

28. பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =