மத்தேயு 8 – Matthew Chapter 8

Matthew Chapter 8

மத்தேயு அதிகாரம் 8

1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

3. இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:

6. ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

7. அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.

10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

12. ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.

14. இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.

15. அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:

17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

18. பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.

19. அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

20. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.

25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.

26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.

27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

28. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியில் யாரும் நடக்கக்கூடாதிருந்தது.

29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.

33. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.

34. அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =