யோபு 38 – Job Chapter 38

Job Chapter 38

யோபு அதிகாரம் 38

1. அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:

2. அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?

3. இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

7. அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

8. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

9. மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்.

10. நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

11. இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

12. துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

13. உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

14. பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

15. துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

16. நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

17. மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

18. நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

19. வெளிச்சம் வாசமாயிருக்குமிடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?

20. அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

21. நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின்தொகை அவ்வளவு பெரிதோ?

22. உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

23. ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

24. வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

25. பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

26. பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

27. வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

28. மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

29. உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?

30. ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

31. அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?

32. இராசிகளை, அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

33. வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

34. ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?

35. நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?

36. அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

37. ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

38. தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

39. நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

40. சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

41. காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =