யோபு 3 – Job Chapter 3

Job Chapter 3

யோபு அதிகாரம் 3

1. அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,

2. வசனித்துச் சொன்னது என்னவென்றால்:

3. நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.

4. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,

5. அந்தகாரமும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.

6. அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.

7. அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.

8. நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.

9. அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.

10. நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.

11. நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?

12. என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?

13. அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,

14. பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,

15. அல்லது, பொன்னை உடையவர்களோடும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.

16. அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.

17. துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

18. கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.

19. சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.

20. மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,

21. பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,

22. அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?

23. தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

24. என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.

25. நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.

26. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =