யோபு 27 – Job Chapter 27

Job Chapter 27

யோபு அதிகாரம் 27

1. யோபு பின்னும் தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

2. என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,

3. என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,

4. என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும் என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

5. நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.

6. என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன், நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.

7. என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.

8. மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

9. ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?

10. அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?

11. தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.

12. இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?

13. பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,

14. அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.

15. அவனுக்கு மீதியானவர்கள் செத்து புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

16. அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

17. அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.

18. அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.

19. அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.

20. வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.

21. கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.

22. அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.

23. ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − thirteen =