Jeremiah Chapter 51
எரேமியா அதிகாரம் 51
1. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,
2. தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.
3. வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.
4. குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
5. அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.
6. நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
7. பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.
8. பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
9. பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.
10. கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
11. அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
12. பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.
13. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
14. மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப் போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம் பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.
15. அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
16. அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.
17. மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
18. அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்..
19. யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
20. நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
21. உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
22. உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
23. உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
24. பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25. இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26. மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27. தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
28. மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
29. அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.
30. பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
31. கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
32. அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
33. பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
34. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
35. எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன் மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.
36. ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
37. அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.
38. ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
39. அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
40. அவர்களை ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்.
41. சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரம்மிப்பானது எப்படி?
42. சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
43. அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.
44. நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.
45. என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
46. உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
47. ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.
48. வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
49. பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.
50. பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
51. நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
52. ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.
53. பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
54. பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
55. கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.
56. பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.
57. அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
58. பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவாகவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
59. பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.
60. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
61. எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
62. கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித்தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி
63. நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,
64. இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.