எரேமியா 12 – Jeremiah Chapter 12

Jeremiah Chapter 12

எரேமியா அதிகாரம் 12

1. கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

2. நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

3. கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு கொலைநாளுக்கு அவர்களை நியமியும்.

4. எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

5. நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

6. உன் சகோதரரும், உன் தகப்பன்வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.

7. நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

8. என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்காயிற்று: அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.

9. என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

10. அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.

11. அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

12. கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

13. கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.

14. இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

15. அவர்களை நான் பிடுங்கிப்போட்டபிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன்.

16. அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.

17. கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =