ஏசாயா 32 – Isaiah Chapter 32

Isaiah Chapter 32

ஏசாயா அதிகாரம் 32

1. இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.

2. அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.

4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.

5. மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.

6. ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

7. லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.

8. தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

9. சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

10. நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

11. சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

12. செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

13. என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

14. அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.

15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

16. வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.

17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

18. என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.

19. ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.

20. மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =