ஏசாயா 19 – Isaiah Chapter 19

Isaiah Chapter 19

ஏசாயா அதிகாரம் 19

1. எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

2. சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.

3. அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும் சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.

4. நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவானென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

5. அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

6. ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும்.

7. நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.

8. மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.

9. மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், சல்லாக்களை நெய்கிறவர்களும் நாணுவார்கள்.

10. மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்.

11. சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

12. அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.

13. சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.

14. கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள்.

15. எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.

16. அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவிலே அஞ்சி நடுங்குவார்கள்.

17. சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான்.

18. அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.

19. அக்காலத்திலே எகிப்துதேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும்.

20. அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

21. அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.

22. கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.

23. அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்.

24. அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.

25. அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =