1 சாமுவேல் 24 – 1 Samuel Chapter 24

1 Samuel Chapter 24

1 சாமுவேல் அதிகாரம் 24

1. சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

2. அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

3. வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

4. அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.

5. தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

6. அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

7. தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

8. அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,

9. சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

10. இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.

11. என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

12. கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.

13. முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

14. இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?

15. கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

16. தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,

17. தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.

18. நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.

19. ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.

20. நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

21. இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான்.

22. அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nine =