1 சாமுவேல் 11 – 1 Samuel Chapter 11

1 Samuel Chapter 11

1 சாமுவேல் அதிகாரம் 11

1. அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

2. அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.

3. அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.

4. அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.

5. இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

6. சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,

7. ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

8. அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

9. வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

10. பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.

11. மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.

12. அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

13. அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.

14. அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

15. அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =