வெளிப்படுத்தின விசேஷம் 16 – Revelation Chapter 16

Revelation Chapter 16

வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 16

1. அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

2. முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

3. இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

4. மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.

5. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

6. அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

7. பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.

8. நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;

10. ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,

11. தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.

12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

13. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.

14. அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

15. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

16. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.

17. ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.

18. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

19. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.

20. தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.

21. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nineteen =