நீதிமொழிகள் 5 – Proverbs Chapter 5

Proverbs Chapter 5

நீதிமொழிகள் அதிகாரம் 5

1. என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

2. அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

3. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

4. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.

5. அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

6. நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

7. ஆதலால் பிள்ளைகளே இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.

8. உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

9. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

10. அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.

11. முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

12. ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

13. என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

14. சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.

15. உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

16. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

17. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

18. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

19. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

20. என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

21. மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

22. துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

23. அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =