நீதிமொழிகள் 3 – Proverbs Chapter 3

Proverbs Chapter 3

நீதிமொழிகள் அதிகாரம் 3

1. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

7. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

8. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

9. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

10. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

11. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

12. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

13. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

14. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

15. முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

16. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

17. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

18. அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

19. கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

20. அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப்பெய்கிறது.

21. என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.

22. அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

23. அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

24. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

25. சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.

26. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

27. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

28. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

29. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

30. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

31. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

32. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

33. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

34. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

35. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =