யோசுவா 1 – Joshua Chapter 1

Joshua Chapter 1

யோசுவா அதிகாரம் 1

1. கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:

2. என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

3. நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

4. வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

5. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

6. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

7. என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

8. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

9. நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

10. அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

11. நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

12. பின்பு யோசுவா: ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரையும் நோக்கி:

13. கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

14. உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,

15. கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

16. அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

17. நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.

18. நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 9 =