யோவான் 1 – John Chapter 1

John Chapter 1

யோவான் அதிகாரம் 1

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.

7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.

9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

13. அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

15. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

16. அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

19. எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,

20. அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.

21. அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

22. அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.

23. அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

24. அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.

25. அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.

26. யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.

27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.

28. இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.

32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.

34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,

36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.

38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

39. அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.

41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

42. பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

43. மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.

44. பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.

45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.

46. அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

48. அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

51. பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =