யோபு 39 – Job Chapter 39

Job Chapter 39

யோபு அதிகாரம் 39

1. வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?

2. அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?

3. அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.

4. அவைகளின் குட்டிகள் பலத்து வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய் விடும்.

5. காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

6. அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.

7. அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.

8. அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.

9. காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?

10. படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ?

11. அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?

12. உன் தானியத்தை அது உன் வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?

13. தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

14. அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,

15. காலால் மிதிபட்டு உடைந்துபோம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.

16. அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.

17. தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

18. அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.

19. குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?

20. ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.

21. அது தரையிலே தாளடித்து, தன்பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.

22. அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.

23. அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும் கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,

24. கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.

25. எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்.

26. உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?

27. உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?

28. அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.

29. அங்கேயிருந்து இரையை நோக்கும், அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.

30. அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =