யோபு 16 – Job Chapter 16

Job Chapter 16

யோபு அதிகாரம் 16

1. அதற்கு யோபு பிரதியுத்தரமாக:

2. இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.

3. காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?

4. உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.

5. ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன். என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.

6. நான் பேசினாலும் என் துக்கம் மாறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?

7. இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.

8. நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.

9. என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.

10. எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.

11. தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

12. நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.

13. அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.

14. நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாயந்தார்.

15. நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.

16. அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.

17. என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.

18. பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

19. இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.

20. என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

21. ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.

22. குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =