ஏசாயா 66 – Isaiah Chapter 66

Isaiah Chapter 66

ஏசாயா அதிகாரம் 66

1. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

2. என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

3. மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

4. நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

5. கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

6. நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.

7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

9. பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

10. எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

11. நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரயாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;

12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

13. ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

14. நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

15. இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

16. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

17. தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18. நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

19. நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.

20. இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

21. அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

22. நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

24. அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =