2 சாமுவேல் 8 – 2 Samuel Chapter 8

2 Samuel Chapter 8

2 சாமுவேல் அதிகாரம் 8

1. இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2. அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

3. ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,

4. அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

5. சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

6. தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

7. ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

8. ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:

9. தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,

10. ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

11. அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,

12. ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.

13. தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.

14. ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

15. இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.

16. செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

17. அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

18. யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =