2 சாமுவேல் 1 – 2 Samuel Chapter 1

2 Samuel Chapter 1

2 சாமுவேல் அதிகாரம் 1

1. சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு,

2. மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.

3. தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.

4. தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

5. சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,

6. அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

7. அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,

8. அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.

9. அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.

10. அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.

11. அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

12. சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

13. தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

14. தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்று போடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,

15. வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.

16. தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.

17. தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

18. (வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

19. இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.

20. பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.

21. கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

22. கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.

23. உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்து போனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.

24. இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.

25. போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

26. என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

27. பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =