2 கொரிந்தியர் 13 – 2 Corinthians Chapter 13

2 Corinthians Chapter 13

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

2 கொரிந்தியர் அதிகாரம் 13

1. இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.

2. நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.

3. கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.

4. ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.

5. நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.

6. நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.

7. மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.

8. சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.

9. நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.

10. ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.

11. கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

12. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.

13. பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =