சகரியா 12 – Zechariah Chapter 12

Zechariah Chapter 12

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

சகரியா அதிகாரம் 12

1. இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

2. இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.

3. அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.

6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

7. தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

8. அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

10. நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

11. அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.

12. தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

13. லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

14. மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =