எண்ணாகமம் 4 – Numbers Chapter 4

Numbers Chapter 4

எண்ணாகமம் அதிகாரம் 4

1. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2. லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,

3. ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.

4. ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.

5. பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,

6. அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

7. சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.

8. அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

9. இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

10. அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,

11. பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

12. பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,

13. பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,

14. அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.

15. பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

16. ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

17. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

18. லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.

19. அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:

20. ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.

21. பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:

22. கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

23. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.

24. பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:

25. அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,

26. பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.

27. கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும், அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.

28. கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

29. மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

30. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.

31. ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,

32. சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.

33. ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

34. அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

35. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.

36. அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.

37. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக, எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.

38. கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

39. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.

40. அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.

41. மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.

42. மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

43. முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.

44. அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.

45. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.

46. லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைவேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,

47. மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும்,

48. எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள்.

49. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =