எண்ணாகமம் 12 – Numbers Chapter 12

Numbers Chapter 12

எண்ணாகமம் அதிகாரம் 12

1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:

2. கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

3. மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.

4. சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

5. கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.

6. அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

7. என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

8. நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

9. கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.

10. மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

11. அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

12. தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.

13. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

14. கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.

15. அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.

16. பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =