மீகா 4 – Micah Chapter 4

Micah Chapter 4

1 2 3 4 5 6 7

மீகா அதிகாரம் 4

1. ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

2. திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

3. அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

4. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

5. சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

6. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,

7. நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.

8. மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.

9. இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும்.

10. சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

11. சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.

12. ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

13. சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =