மத்தேயு 10 – Matthew Chapter 10

Matthew Chapter 10

மத்தேயு அதிகாரம் 10

1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.

9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,

10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

12. ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.

13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;

14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

16. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

17. மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.

18. அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.

19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24. சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.

25. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

26. அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.

27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளிலே பிரசித்தம்பண்ணுங்கள்.

28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.

36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான். தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

41. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

42. சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + five =