யோபு 28 – Job Chapter 28

Job Chapter 28

யோபு அதிகாரம் 28

1. வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

2. இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.

3. மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்

4. கடக்கக் கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.

5. பூமியின்மேல் ஆகாரம் விளையும், அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும்.

6. அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன் பொடிகளும் உண்டாயிருக்கும்.

7. ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லுூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;

8. துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.

9. அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.

10. கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.

11. ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.

12. ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?

13. அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.

14. ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.

15. அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.

16. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

17. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக் கூடாது.

18. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

19. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.

20. இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?

21. அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.

22. நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.

23. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.

24. அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

25. அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,

26. மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

27. அவர் அதை பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,

28. மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =