ஏசாயா 34 – Isaiah Chapter 34

Isaiah Chapter 34

ஏசாயா அதிகாரம் 34

1. ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.

2. சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

3. அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்.

4. வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.

5. வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

6. போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

7. அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.

8. அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.

9. அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.

10. இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.

11. நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.

12. ராஜ்யபாரம்பண்ணின அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.

13. அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.

14. அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.

15. அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.

16. கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.

17. அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fourteen =