ஏசாயா 33 – Isaiah Chapter 33

Isaiah Chapter 33

ஏசாயா அதிகாரம் 33

1. கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.

2. கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.

3. அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.

4. வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.

5. கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.

6. பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

7. இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.

8. பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான்.

9. தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.

10. இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11. பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப்பட்சிக்கும்.

12. ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

13. தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

14. சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

15. நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

16. அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

17. உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.

18. உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?

19. உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.

20. நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.

21. மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.

22. கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.

23. உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.

24. வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =