ஏசாயா 24 – Isaiah Chapter 24

Isaiah Chapter 24

ஏசாயா அதிகாரம் 24

1. இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

2. அப்பொழுது ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும் கொண்டவனுக்கும் எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கும் எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும்.

3. தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.

4. தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

5. தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது. அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.

6. இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள். சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

7. திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.

8. மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.

9. பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.

10. வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக் கூடாதபடி, வீடுகளெல்லாம் பட்டுக்கிடக்கும்.

11. திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்.

12. நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.

13. ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.

14. அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.

15. ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

16. நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன் இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.

17. தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

18. அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்,

19. தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

20. வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால் அது விழுந்துபோம், இனி எழுந்திராது.

21. அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

22. அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

23. அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =