எஸ்றா 7 – Ezra Chapter 7

Ezra Chapter 7

1 2 3 4 5 6 7 8 9 10

எஸ்றா அதிகாரம் 7

1. இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்.

2. இவன் சல்லுூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன்,

3. இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மொராயோதின் குமாரன்,

4. இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,

5. இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.

6. இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

7. அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.

8. ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.

9. முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

10. கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

11. கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:

12. ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

13. நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும் லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

14. நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

15. ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,

16. பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.

17. ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள்தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.

18. மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியது இன்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.

19. உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

20. பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.

21. நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறுதாலந்து வெள்ளி, நூற்றுக்கலக்கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,

22. வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

23. பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

24. பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

25. பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.

26. உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்கரகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவனென்று எழுதியிருந்தது.

27. எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத்தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

28. அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seventeen =