எஸ்றா 4 – Ezra Chapter 4

Ezra Chapter 4

1 2 3 4 5 6 7 8 9 10

எஸ்றா அதிகாரம் 4

1. சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்களென்று யூதாவுக்கும் பென்யமீனுக்குமிருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது,

2. அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து; உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோமென்று அவர்களோடே சொன்னார்கள்.

3. அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

4. அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

5. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும் தரியு என்னும் பெர்சியா ராஜா அரசண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள்.

6. அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

7. அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

8. ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

9. ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,

10. பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்தை குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.

11. அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

12. உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

13. இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள்; அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.

14. இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

15. உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

16. ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு; இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.

17. அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,

18. நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது.

19. நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,

20. எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும் பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

21. இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள்.

22. இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

23. ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

24. அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =