எசேக்கியேல் 25 – Ezekiel Chapter 25

Ezekiel Chapter 25

எசேக்கியேல் அதிகாரம் 25

1. கர்த்தருடைய வார்த்தை எனக்குண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

3. அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

4. இதோ, நான் உன்னைக் கிழக்குத் தேசத்தாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரண்களைக் கட்டி உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள்; அவர்கள் உன் கனிகளைப் புசித்து, உன் பாலைக் குடிப்பார்கள்.

5. நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

6. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

7. இதோ, உனக்கு விரோதமாக, நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

8. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

9. இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,

10. நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

11. மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

12. கர்த்தாராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்துபழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,

13. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.

14. நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

16. இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,

17. உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 5 =