யாத்திராகமம் 32 – Exodus Chapter 32

Exodus Chapter 32

யாத்திராகமம் அதிகாரம் 32

1. மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

3. ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

4. அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

5. ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

6. மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

7. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

8. அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

10. ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

11. மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

12. மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.

13. உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

14. அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

15. பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

17. ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

18. அதற்கு மோசே; அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.

19. அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

20. அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

21. பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.

22. அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

23. இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

24. அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

25. ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

26. பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

27. அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

28. லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

29. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.

30. மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

31. அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.

32. ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

33. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

34. இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.

35. ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =