உபாகமம் 24 – Deuteronomy Chapter 24

Deuteronomy Chapter 24

உபாகமம் அதிகாரம் 24

1. ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.

2. அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.

3. அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,

4. அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

5. ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில்தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.

6. திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக் கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்.

7. தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

8. குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

9. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10. பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.

11. வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.

12. அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,

13. அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்: அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

15. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

16. பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

17. நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து,

18. நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச்செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

19. நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

20. நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

21. நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

22. நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =