உபாகமம் 2 – Deuteronomy Chapter 2

Deuteronomy Chapter 2

உபாகமம் அதிகாரம் 2

1. கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.

2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:

3. நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித் திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.

4. ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;

5. அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

6. போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்.

7. உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

8. அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம்.

9. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

10. திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள்.

11. அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

12. ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் புத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.

13. நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றைக் கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.

14. யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

15. அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.

16. யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு,

17. கர்த்தர் என்னை நோக்கி:

18. நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,

19. அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

20. அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

21. அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,

22. கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

23. கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

24. நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்.

25. வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.

26. அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:

27. நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன்.

28. சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும் நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்,

29. எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

30. ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

31. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.

32. சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.

33. அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,

34. அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.

35. மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.

36. அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.

37. அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =