Deuteronomy Chapter 13
உபாகமம் அதிகாரம் 13
1. உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:
2. நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,
3. அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
4. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
5. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
6. உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
8. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
9. அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
10. அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.
11. இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
13. நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
14. நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
15. அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
16. அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.
17. சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
18. கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.