தானியேல் 12 – Daniel Chapter 12

Daniel Chapter 12

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

தானியேல் அதிகாரம் 12

1. உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.

2. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

3. ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

5. அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.

6. சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.

7. அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.

8. நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

9. அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.

10. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.

11. அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.

12. ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.

13. நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =