அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 – Acts Chapter 8

Acts Chapter 8

அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரம் 8

1. அவனைக் கொலை செய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிறைப்பட்டுப்போனார்கள்.

2. தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்

3. சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

4. சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

5. அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான்.

6. பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.

7. அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.

8. அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.

9. சீமோன் என்று பேர்கொண்ட ஒருமனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

10. தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

11. அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

12. தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

13. அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும்கண்டு பிரமித்தான்.

14. சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

15. இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

16. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

17. அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.

18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

19. நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

20. பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,

21. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

22. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

23. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

24. அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

25. இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

26. பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.

27. அந்தப்படி அவன் எழுந்து போனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

28. ஊருக்குத் திருமபிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.

29. ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

30. அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

31. அதற்கு அவன் ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.

32. அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

33. அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

34. மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

35. அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப்பிரசங்கித்தான்.

36. இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

37. அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

38. இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

39. அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

40. பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =