அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 – Acts Chapter 17

Acts Chapter 17

அப்போஸ்தலருடைய நடபடிகள் அதிகாரம் 17

1. அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.

2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

4. அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.

5. விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.

6. அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.

7. இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,

8. இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.

9. பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்

10. உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

11. அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

12. அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.

13. பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.

14. உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

15. பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,

17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்

18. அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.

19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.

21. அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.

23. எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

24. உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

25. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

26. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

27. கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

28. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

29. நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

32. மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

33. இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.

34. சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =