2 சாமுவேல் 9 – 2 Samuel Chapter 9

2 Samuel Chapter 9

2 சாமுவேல் அதிகாரம் 9

1. யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

2. அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

3. அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

4. அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.

5. அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

6. சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

7. தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக்கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.

8. அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.

9. ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.

10. ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.

11. சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.

12. மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.

13. மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =