எண்ணாகமம் 5 – Numbers Chapter 5

Numbers Chapter 5

எண்ணாகமம் அதிகாரம் 5

1. கர்த்தர் மோசேயை நோக்கி:

2. குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

3. ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார்.

4. கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள்.

5. மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:

6. இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,

7. அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒருபங்கை அதிகமாய்க் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன்

8. அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.

9. இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும்.

10. ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.

11. கர்த்தர் மோசேயை நோக்கி:

12. நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி,

13. ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,

14. எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,

15. அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக.

16. ஆசாரின் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,

17. ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,

18. ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்,

19. பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.

20. உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,

21. கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.

22. சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.

23. பின்பு ஆசாரியன் இந்தச் சாப வார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு,

24. சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.

25. பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,

26. ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.

27. அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.

28. அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.

29. ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,

30. புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.

31. புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =