எண்ணாகமம் 36 – Numbers Chapter 36

Numbers Chapter 36

எண்ணாகமம் அதிகாரம் 36

1. யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:

2. சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.

3. இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.

4. இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.

5. அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.

6. கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.

7. இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

8. இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.

9. சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.

10. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.

11. செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,

12. அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.

13. எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =