எண்ணாகமம் 10 – Numbers Chapter 10

Numbers Chapter 10

எண்ணாகமம் அதிகாரம் 10

1. கர்த்தர் மோசேயை நோக்கி:

2. சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.

3. அவைகளை ஊதும்போது, சபையாரெல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.

4. ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.

5. நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.

6. அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.

7. சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.

8. ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.

9. உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.

10. உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.

11. இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.

12. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

13. இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.

14. யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

15. இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.

16. செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.

17. அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

18. அதற்குபின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.

19. சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல் தலைவனாயிருந்தான்.

20. காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.

21. கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.

22. அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

23. மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

24. பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

25. அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.

26. ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.

27. நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.

28. இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.

29. அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

30. அதற்கு அவன்: நான் வரக் கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.

31. அப்பொழுது மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.

32. நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.

33. அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

34. அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.

35. பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.

36. அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =